மலேரியாவை கட்டுப்படுத்தும் மர சூரிய காந்தி



நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் அன்றாடம் சாலை ஓரங்களில் மலர்ந்து கிடக்கும் மர சூரிய காந்தி பூவின் மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம். 

இது சூரிய காந்தியைப் போல காணப்பட்டாலும் மரமாக வளரும் தாவர வகையை சேர்ந்ததாகும். இதன் இலைகள், பூக்கள் ஆகியவையும் மருந்தாக பயன்படுகிறது. இது மேற்பூச்சு மருந்தாக மட்டுமின்றி உள்மருந்தாக எடுத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. மலேரியா காய்ச்சலை போக்கக் கூடிய சிறந்த மருந்தாக மர சூரிய காந்தி விளங்குகிறது. 

மர சூரிய காந்தி அல்லது காட்டு சூரிய காந்தி என்று அழைக்கப்படும் இதன் மலர்களை கொண்டு மலேரியா காய்ச்சல், சாதாரண காய்ச்சல் ஆகியவற்றை போக்கும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். மர சூரிய காந்தி பூக்கள், தனியா, பனங்கற்கண்டு. மர சூரிய காந்தியின் ஒரு பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் அரை ஸ்பூன் தனியா மற்றும் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து கஷாயம் தயார் செய்ய வேண்டும். 

இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் பருகுவதன் மூலம் மலேரியா உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது ஒரு வேளைக்கு கஷாயம் தயாரிக்க ஒரு பூ மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என்ற அளவில் ஒரு வாரம் வரையில் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்தலாம். 

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூடவே மருத்துவரின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்வது நல்லது.

மர சூரிய காந்தி பூக்கள் நுண் கிருமிகளை போக்கக் கூடியது. பூஞ்ச காளான்களை அழிக்கக் கூடியது. நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக மலேரியா போன்ற காய்ச்சலை தணிக்கக் கூடியதாகவும் மர சூரிய காந்தி விளங்குகிறது. மேலும் இது உடல் வலியை போக்கக் கூடியதாகவும் உள்ளது. முறிந்த எலும்புகளை கூட இணைக்கும் வல்லமை மர சூரியகாந்திக்கு உள்ளது. தற்போது இதை பயன்படுத்தி சிராய்ப்பு காயங்களுக்கான, சிறிய அளவிலான தீக்காயங்களுக்கு மேற்பூச்சு மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மர சூரிய காந்தி பூ, தேங்காய் எண்ணெய், சீரகம்.

மர சூரிய காந்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை வாணலியில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பூவின் பசையை சேர்க்க வேண்டும். பூக்கள் நன்றாக பொரியும் வரையில் சிறிய வாட்டத்துடன் எண்ணெய்யை நன்றாக காய்ச்ச வேண்டும். அவ்வாறு பொரிந்து வரும் வேளையில் சிறிதளவு சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சீரகமும் பொரிந்தவுடன் நெருப்பை நிறுத்தி விட வேண்டும். இது ஆறிய பிறகு இந்த தைலத்தை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது ஏற்படும் சிறிய அளவிலான சிராய்ப்புகள், காயங்கள், சிறிய அளவிலான தீக்காயங்களுக்கு இவற்றை மேற்பூச்சாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மர சூரிய காந்தி நமக்கு பல்வேறு வகையிலும் மருத்துவ பொருளாக இருந்து பயன் அளித்து வருகிறது.

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.